ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

வியாழன் மகாதிசை



வியாழன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
தன்னிரகற்ற வியாழ பகவானின் திசா காலம் வருடம் 16 ஆகும். அதில் அவரது புத்தி 2 வருடம் 1 மாதம் 18 நாள்களாகும். நன்மை தரத்தக்க வகையில் அவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஓர் அரசனைப் போல் மகிழ்வுடன் வாழும் வசதியான வாழ்வு நேரும். குருவினுடைய அருளும் வாய்க்கும்.குறைவில்லா வகையில் திரவியங்கள் வந்து சேர்தலும் நிறைந்த லாபம் வந்தடைவதோடு மனைவியால் மனமகிழ்ச்சி யுண்டாதலும் மங்களகரமான சுப சோபனம் நேர்தலும் இல்லத்தில் திருமணகாரியங்கள் நிகழ்தலும் நேரும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

வியாழ மகாதிசையில் சனிபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். கொடைத் தன்மை மிகு சனிபகவான், அக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: புத்திரோற்பத்தி ஏற்படுதலும் இன்பம் நேர்தலும், எண்ணிய எண்ணங்கள் எண்ணிய வண்ணம் ஈடேறுதலும் நேரும். வெகு திரவியமும் பொன்னாபரணம் புத்தாடை சேர்க்கையும் ஏற்படும். எழுச்சிபெறும் அரசனைப் போல் சம்பத்தும் கனக தண்டிகையும் வாகனாதிகளும் ஏற்பட்டு வெகு பிரபலனாவான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

வியாழ மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். அக்காலகட்டத்தில் ஏற்படும் பலாபலன்களாவன: மலைபோலச் செல்வமானது பெருகிக் காணும். குறைவில்லாத மனைவியுடனும் குழந்தைகளுடனும் கட்டுக்கோப்பான நல்வாழ்வினைச் சாதகன் பெறுவான். வெகுதனமும், பெரும் புகழும் கொண்டு அரச சம்பத்தும் பட்டம் பதவிகளும் பெறுவதோடு இவனது மனைவியில் திருமகள் நிலை கொண்டு உறைவாள் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் கேது பகவானின் பொசிப்புக் காலம் தீது 11 மாதம் 6 நாள்களாகும். இன்பம் நல்காத அக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கேட்பாயாக! கொடிய வியாதியினால் மரணமடைதலும், இதமாக நடந்து கொள்ளத் தெரியாத மனைவியினால் மனமுறிந்து பிரிந்து செல்வதும் நேரிடும். பகைவர்களும் பலவிதத்தில் சேதம் விளைவிக்க வந்து சேர்வார்கள், சகல ஜனங்களால் கிடைத்த அனைத்து பாக்கியமும் ஒரு கணத்தில் மறைந்து போம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் அருளே உருவான திருமகள் தானே விரும்பி வந்து உறைவாள். சுபசோபனங்கள் ஏற்படும். மனமகிழ்ச்சியுண்டாகும். சுகம் தரக்கூடிய கன்னிகையுடன் இன்பமாக வாழ்வான். நாடு நகரங்கள் தனதெனக் கைவசமாகும், இந்நிலவுலகில் நன்மை மிகுந்து புகழுடன் வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்
வியாழமகாதிசையில் சூர்யபகவானின் பொசிப்புக் காலம் 9 மாதம் 18 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன், கேட்பாயாக! இல்லறத்தை நீத்து துறவறத்தைப் பூண்டு பரதேசியாகிப் போதல் நேரும். சிறப்புடைய மடத்தில் மடாதிபதியாய்ப் பரம குருவாய் ஆதலும் நேரும், உண்மையான அறிவு வழி (ஞானம்) நிலையில் நின்று யோகநிலை கொண்டு நினைவில் சிவனை நிறுத்தி அவனடி மறவாதவனாக இருப்பான். இதனையும் நீ காண்க என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 4 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களான: நலம் தரத்தக்க வகையில் திருமணம் நிகழ்தலும் சுப சோபனங்களும் உண்டாகும். பல்லக்கு, முத்தாபரணம். வெண்குடை ஆகியன விரைந்து வந்து சேரும். பெருமையுடைய அரசர்களால் வெகுதனம் உண்டாகும். ஈன்ற தாய், தந்தை, மனைவி மக்களுடன் நிலைத்த புகழ் உடையவனாகி இவ்வுலகில் பெருமையுடன் வாழ்ந்திருப்பன் இச்சாதகன் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

வியாழமகா திசையில் செவ்வாயின் பொசிப்புக்காலம் 11மாதம் 6 நாட்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: புண்களாலும், அக்னியாலும் நோய் வந்தடையும். பூமியில் விளைச்சல் குறைந்துபோகும். கன்றுகாலிகள் மரணமடையும் ஆகாயத்திலே பறந்து சென்றாலும் அங்கேயும் பகைவர் உளராவர். சிறைவாய்ப் படுதலும் அதனால் துன்புறுதலும் விதிவசமே என்று விதிவசமே என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

வியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: தேக நலத்தைக் கெடுக்கும். வியாதிகள் வந்துசேரும். மனைவி, புத்திரர் ஆகியோர் மரணமடைதலும் நேரும். பகைவரால் வெகுபயம் உண்டாகும். அவரால் இடைஞ்சல்கள் ஏற்படும். காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.