ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, November 30, 2013

குரு பலம்

ஒருவர் ஜாதகதக்தில் குரு பலம் பெற்றிருப்பது முக்கித்துவம் வாய்ந்தது. குரு பலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும். குரு பலம் இருந்தால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை போன்றவை நீங்கும்.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்திலும், மற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சுமார் நான்கரை மாதங்களிலும், "குரு பலம் வந்துவிட்டது' என்று கொண்டு திருமண முயற்சிகளை செய்வது மரபு.

ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம். குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த இடத்திலிருந்து 5,7,9ம் இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம் அடைகின்றன.  

குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். குரு பகவானின் அருள் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மிக முக்கியமானது, குருபலன் இருந்தால்பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும் எனவும், குருவின் அருள் இருந்தால் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையும்நிலவி வருகிறது.

குருவின் செயல்கள்

சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும்.  ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் - வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம்  பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன.
 

லக்னத்தில் குரு: லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு  விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். அதே நேரத்தில் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள்  உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார்.

இரண்டில் குரு:
 லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.  திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும்  சரியாக இருக்கும்.

ஐந்தில் குரு:
 லக்னத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் குழந்தை பாக்ய தடை அல்லது காலம் கடந்து குழந்தைகள்  பிறப்பது, உடற்குறையுள்ள புத்திரர்கள், புத்திரர்களால் நிம்மதியற்ற தன்மை, புத்திரசோகம் என ஏற்படும்.

ஏழில் குரு:
 லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும். ஆனால், ஏழாம்  இடத்தில் இருந்து குரு லக்னத்தை பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம், புகழ், அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு உண்டாகும்.

பத்தில் குரு:
 லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில், உத்யோக ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால் வியாபாரம், தொழிலில் ஏதாவது  சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும், அடிக்கடி தொழிலை மாற்றுவார். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பிடிப்பு இருக்காது. தொழில் செய்யும்  இடங்களில் வழக்குகள் மற்ற குறுக்கீடுகள் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், வழக்குகள் என  ஏற்படலாம். ஆனால், பத்தாம் இடத்தில் இருந்து குரு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம், மண், மனை, வீடு, வாகன யோகம்  உண்டாகும்.

குருவும் - கேதுவும்

கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்ல
லாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம்மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.

குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்துஅதிகாரம்  கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர்  இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில்  ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசைதிரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.

வியாழ வட்டம்
 

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த  ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப்  பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு  மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகமும் அடிப்பட்டு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவன் பிழைத்துவிடலாம்.  அப்படி என்ன தான் குரு கிரகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நமக்கு தருபவர் குரு கிரகம்.
குரு பலன் கோச்சாரபடியும் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியும்

கல்யாணம் எனக்கு எப்போது நடக்கும் சார் என ஒருவர் ஜாதகம் கொடுத்து கேட்டால் முதலில் அவர் ராசிக்கு குரு பலம் இருக்கா என பார்க்கணும்.அதன் பிறகு அவர் ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி எங்கு இருக்கார் 7 மிடத்தில் என்ன கிரகம் இருக்கு,7 ஆம் இடத்தை எந்த கிரகம் பார்க்குது...சுக்கிரன்,செவ்வாய் 6,8,12 ல் மறைஞ்சு இருக்கான்னு பார்த்துட்டுதான் திசா புத்தி பார்க்குறோம்..குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,புதன்,7க்குடையவன் ,9க்குடையவன்,5க்குடையவன் புத்தி நடந்தா திருமணம் சீக்கிரம் நடக்கும்.


குருபலம்  உள்ள  காலங்களில் நாம் எந்த விதமான  புது முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக நடைபெறும். குருபலம் உள்ள நேரத்தில் தான் மகிழ்ச்சி, பணபுழக்கம், திருமணம், குழந்தை, வியாபார மேன்மை, வெற்றிகள் போன்ற பலன்கள் கிடைக்கும். 
  
ஒன்பது கிரகஙகளில் குரு அதிக சுபபலம் பொருந்தியவர் என்பதால் அவர் தீமை செய்ய வாய்ப்பு குறைவு. எனவே குரு பலம் வரும் காலத்தில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் மற்றும் நற்காரியஙகள் செய்து நன்மை பெறலாம்.