ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Friday, November 8, 2013

தசாபுத்தி பலன்கள்

லக்கினாதிபன் தசை /புத்தி


லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்.


லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும்.  குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், கௌரவமும் வாக்கினால் இலாபங்களும் உண்டாகும்.


லக்கினாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால்  சகோதரர்களால் நன்மையும் தனக்கு வேண்டிய காரியங்களை செய்வதற்குத் தக்க துணைவர்கள் மற்றும் உதவியாட்கள் தாமாகவே உண்டாவதும் தமது மனோ தைரியத்தால் வெற்றியும் புகழும் அமைவதும் யோக சுகத்தில் லயிப்பும் சகோரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.


லக்கினாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாயால் அல்லது மாமன் வர்க்கத்தாரால் நன்மைகளும் வித்தையும்  வீடுவாகனங்கள் சேர்வதும் அவற்றால் இலாபங்கள் உண்டாவதும் தன் சகோதரர்களுக்குப் பொருள் இலாபங்கள் ஏற்பட்டு அதனால் தானும் லாபங்கள் அடைதலும் வியாபார விருத்தியும்  தொடர்ந்து மேன்மைகளும் உண்டாகும்.


லக்கினாதிபன் ஐந்தாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திரர்களால் லாபங்களும் தன் புத்தியாலும் வித்தைகளாலும் மேலான புகழ் இவற்றை அடைவதும் மற்றும் உபதேசம் பெறுவது வீடு வாகனங்களால் லாபங்கள் உண்டாவதும் ஆகும்.  லக்கினாதிபன் ஐந்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தசை ஆரம்பத்தில் புத்திரசோகம் ஏற்படும் என்பது சிலர் கருத்து.


லக்கினாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அக்காலத்தில் பகை, வம்புகுகள், கடன்கள் நோய்கள் முதலியவற்றால் பலவிதமான கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.  மனைவியை இழக்க நேரிடும்.  தன் மக்களின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை நடத்த நேரிடும் தாயாதிகளால் குடும்ப சிக்கல்கள் பாகப் பிரிவினை போன்ற தொல்லைகளும் உண்டாகும்.  கோயில் சொத்துக்களை அனுபவிக்கவும் அவ்வழியாகவே நஷ்டங்களை அடையவும் நேரிடும்.


லக்கினாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் திருமணம் மகப்பேறு போன்ற நன்மைகள் உண்டாகும் அல்லது தன் மகளுக்கு மணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைகளை அடைவதும் கூடும்.  கூட்டு வியாபாரம் அமையும்.  வழக்குகளில் வெற்றி பெற்று தன் பகைவரின் சொத்துக்களை அடையவும் கூடும் பிராயணங்களால் இலாபங்கள் உண்டாகும்.


லக்கினாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மரண பயம் அல்லது அதற்குச் சமமான கண்டங்கள் உண்டாகும்.  கடனால் அவமானங்கள் ஏற்படும்.  திருடர்களுடன் சம்பந்தம் எற்படும்.  அதனால் சிறை தண்டனைகள் அனுபவிக்கும் படியாகவும் நேரலாம்.  பலவிதமான கஷ்ட நஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும்.


லக்கினாதிபன் ஒன்பதாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்.  மனைவியால் பாக்கிய விருத்தியும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும்.  சகல விதங்களிலும் மேலான சுகங்கள் நிறைந்த வாழ்க்கை உண்டாகம் தன் சகோதரனுக்கும் நன்மை உண்டாகும்.


லக்கினாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மை வியாபார விருத்தி தன் பெயர் நாலாதிசைகளிலும் பரவுதல், அந்நிய நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகள் ஏற்படல்,  வியாபார நிமித்தமாகவும் தீர்த்தயாத்திரை ஸ்தல தரிசனம் போன்ற காரியங்களுக்காவும் பிரயாணங்கள் முதலியவை ஏற்படும்.


லக்கினாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதங்களிலும் பொருள் லாபம் ஏற்படும்.  தன் மூத்த சகோதரர்ருக்கு லாபங்கள் சுகபாக்கிய விருத்திகளும் உண்டாகும்.  தன் பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் மகப்பேறு முதலியன உண்டாகும்.  பெண் தொடர்பு ஏற்படும்,   தாய்க்கு மரணம் ஏற்படும்.


லக்கினாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சொத்துக்களை துறந்து பற்றற்ற வாழ்க்கையும் மோட்ச மார்க்கத்தில் மனம் செல்வதும் மந்திர வித்தைகள் இரகசியமான விஷயங்கள் மற்றும் பிறவிக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அறிய முற்படுதலும்  போன்ற பலன்கள் உண்டாகும்.  பக்தி சிரத்தை அதிகமாகும்.  லக்கினாதிபன் கெட்டுப்போயிருந்தால் கஞ்சத்தனமும் பெரும் சூது, கபடத்தனம் முதலானவற்றின் மூலம் பணம் சேர்க்க முயற்சியும் அதனால் சில தோல்விகளும் நஷ்டங்களும் அன்னியர் மனைவியின் சேர்க்கையும் அதனால் அவமானம் பொருட்செலவுகளும் உண்டாகும்.


மேற்படி பலன்களை மற்ற திசைகளில் லக்கினாதிபனுடைய புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத் பலன் அறிந்து கொள்ள வேண்டும்.  ஒரு கிரகத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் ஏற்பட்டால் அந்த இரண்டில் எந்த வீட்டில் அமைந்துள்ளதோ அதற்குரிய பலனையே விசேஷமாக செய்யும் அப்படித் தன் சொந்த வீடுகளில் ஒன்றியிருக்காமல் வேறு வீடுகளில் இருக்கும்போது லக்கினத்தை எண்ணும்போது முதலாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை தன் திசை அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் பாதிவரையிலும் நடத்திப் பிறகு இரண்டாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை நடத்துவார்.  லக்கினாதிபன் அஷ்டமாதிபதியாகவும் ஆகும் பொழுது (மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்) தன் திசையின் பிற்பகுதியிலும் லக்கினாதிபனுக்குரிய யோக பலன்களை நடத்துவர்.

 
இரண்டாமாதிபன் தசை/புத்தி
 

இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்.


இரண்டாமாதிபன் இரண்டில் இருந்து திசை நடைபெற்றால் பலவிதமான தனலாபங்களும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மேற்கொள்வதும், குடும்பங்கள் உண்டாவதும் தன் வாக்கினால் தொல்லை உண்டாவதும் ஏற்படும்.


இரண்டாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியரின் சொத்துக்கள் மனைவியர் முதலான அனுபவித்தலும் தெய்வ நிந்தை செய்வதும் சகோதரர்களுக்கு பொருட் செலவும் மற்றும் ஜாதகருக்கு தைரிய குறைவும் உண்டாகும். மேற்படி இரண்டாமாதிபன் சுபனாக இருந்தால் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பொது நன்மைக்காக பாடுபடுவார். இரண்டாமாதிபன் செவ்வாயாக இருந்து மூன்றாம் இடத்தில் பாவரோடு சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தால் தைரியமிக்க கொள்ளைக்காரனாவான்.


இரண்டாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆசிரியத் தொழில் அல்லது வாகனத் தொழில் மூலம் தன லாபங்கள் உண்டாகும். தாயாரின் சொத்தை அடைவான். குடும்ப சுகமும் நன்மைகளும் உண்டாகும். தன் சகோரர்களை ஆதரிக்க வேண்டியதாக அல்லது அவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியதாக ஏற்படும்.


இரண்டாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்தி லாபம், வீட்டிலிருந்தே தொழில் நடத்தி அமோகமான சம்பாத்தியம் அடைதல், லாட்டரி பந்தயம் போன்றவற்றில் வெற்றிகள், தன் காலத்திலேயே தன் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுதிவைத்தல் அல்லது அவர்களை மேலான நிலைமைக்கு கொண்டு வருதல் போன்ற பலன்கள் ஏற்படும்.


இரண்டாமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பதும் கடன்களால் தொல்லைகளும் வழக்குகளும் உண்டாவதும் தாய் மாமனால் சகாயமும் உண்டாகும். பகைவரால் பொருட் சேதமும் நஷ்டங்களும் உண்டாகும். முழங்கால்கள் தொடைகளில் வாத ரோகங்கள் அல்லது வேறு விதமான நோய்களும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அந்நியரால் தன லாபங்களும் மனைவியால் சம்பாத்தியமும் உண்டாகும். வைத்தியத் தொழிலில் அல்லது வியாபாரப்பிரதிநிதிப் போன்ற உத்தியோகங்களில் பிரயாணம் செய்வதன் மூலமாக சம்பாத்தியம் ஏற்படும். மனைவிக்கும் தாய்க்கும் அபவாதங்கள் உண்டாகும்.


இரண்டாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் வீடு வாசல் முதலான சொத்துக்கள் நஷ்டமும் தரித்திர வாழ்க்கையும் வெறும் வாய் சாமர்த்தியத்தாலேயே பிழைக்க நேர்வதும், குடும்ப சுகம் கெடுவதும், பின் சகோதரர்களுக்குப் பொருள் விரயமும் கஷ்டங்களும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான வழிகளிலும் தனலாபங்களும் சுகசௌக்கியங்களும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் விருத்தியாகும். தன் சகோதரர்களுக்கு உதவியும் நன்மையும் செய்ய நேரிடும்.


இரண்டாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் அமோகமான தனலாபங்களும் புது சொத்துக்களில் நிர்வாகம் தன் கைக்கு வருவதும் அதிகமான காம வேட்கையும் அதன் காரணமாக செலவுகளும் ஒன்றிரண்டு புத்திர சோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் குறைவு என்றும் சொல்வார்கள்.


இரண்டாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் முதல் இல்லாமலேயே வியாபாரம் நடத்தி அதிகமான இலாபங்களை அடைவதும், பந்தய சூதாட்ட வியாபாரங்கள், பணத்தை வட்டிக்கு விடல் போன்றவற்றில் அதிகமான இலாபங்களும், தன் வாக்கினாலேயே லாபம் அடையும்படியான எழுத்து பேச்சுத் துறைகளால் அதிகமான செல்வப்பெருக்கும் உன்னதமான நிலைமையும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் பனிரெண்டில் இருந்து தசை /புத்தி நடத்தினால் செல்வம் யாவற்றையும் இழந்து தேசாந்திரம் போக நேர்வதும் அந்நியரின் பராமரிப்பில் இருப்பதும் அல்லது சிறையில் இருக்க நேர்வதும் தன் மூத்த மகனுக்கு நோயின் கஷ்டங்களும் உண்டாகும்.


மேற்படி பலன்களை மற்ற திசைகளில் இரண்டாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன்களை அறியவும்.

 
மூன்றாமாதிபன் தசை/புத்தி

மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றி இருப்பதும் அன்னியருக்கு பாரமாக ஜீவனம் நடத்துவதும் அன்னியர் சொத்துக்களின் மேல் ஆசையும் நண்பர்கள் சகோதரர்களுக்கு வேண்டாதவனாக இருக்கும் நிலைமையும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் கோழைத்தனமும் ரோகங்களும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனோதைரியமும் எவரையும் வசப்படுத்திவிடும் தன்மையும் எங்கும் தனக்கு நண்பர்களையும் உதவிசெய்பவர்களையும் உண்டாக்கி கொள்ளும் தன்மையும் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்வதும் பின் சகோதரர்களுக்கு மேன்மையும் அதிகமான சந்ததிகள் உண்டாவதும் ஆன மேலான பலன்கள் உண்டாகும்.


மூன்றாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு மேன்மையும் தனக்கு வசதிகள் சுபங்கள் குறைவும் எப்பொழுதும் தான் மற்றவர்களுக்காகத் தன் சுகவசதிகளை விட்டுக் கொடுத்து அவர்களுக்காக அலைய நேர்வதும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் கஷ்டங்களும் அவளால் சுகக்குறைவும் தன் பிள்ளைகளுக்கு மேன்மையும் சகோதரர்களுக்கு நன்மைகளும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குடும்ப கலகமும், சகோதரர்களுடன் விரோதமும் தன் பிள்ளைகளுக்குச் சம்பாத்தியம் ஏற்படுதலும் தன் வயதிலும் மூத்த பெண்களிடம் தகாத இச்சை உண்டாதலும் அன்னியர் உடைமைகள் தன் வசமாதலும் மாமன் வர்க்கத்தார்க்கு உடல் நலக்குறைவும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அரசாங்க விரோதம், பொதுஜனப்பகை, திருடனாக அல்லது அன்னிய ஸ்திரீகளிடம் தொடர்பு உடையவனாக வாழ்க்கை நடத்தல் பலவிதமான கஷ்டங்களும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டமும் தனக்கொரு உதவி இல்லாமல் திக்கில்லாமல் அலைதலும் கொடூர பாவ செயல்களில் விருப்பமும் அன்னியரால் அல்லது அரசாங்கத்தால் தண்டனைகளை அனுபவிப்பதும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்த தசை /புத்தி நடத்தினால் சகோதரர்களுக்கு பாக்கிய விரத்தியும் தனக்கு மனைவியால் மேன்மை உண்டாவதும் தகப்பனுக்குக் கஷ்டங்களும் கெட்டப் பெயரும் பிதுர்ரார்ஜித சொத்துக்கள் விரயமும் உண்டாகும்.


மூன்றாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் தொல்லைகளும் மற்றவர் சகாயத்தால் தொழிலில் மேன்மை அடைவதும் பிறர் சொத்துக்களும் தன் வசமாதலும் அன்னியப் பெண் ஒருத்தியின் தொடர்பு உண்டாவதுமான பலன்கள் நடைபெறும்.


மூன்றாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் எப்பொழுதும் காமவேட்கையும் அதனால் பொருட் செலவும் உடல் நலக்குறைவும் உண்டாகும், அன்னியரிடம் வேலை செய்வதால் அல்லது அன்னியரால் தன லாபங்கள் உண்டாகும்.


மூனறாமாதிபன் பனிரெட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட வழிகளில் சம்பாத்தியமும் பெண்களால் லாபங்களும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும் தந்தைக்குத் திருட்டு பட்டம் அல்லது கெட்டப் பெயரும் உண்டாகும்.

மேற்படி பலன்களை மற்ற திசைகளில் மூன்றாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

 
நான்காமாதிபன் தசை/புத்தி

நான்காமாதிபன் லக்கினத்தில் தசை /புத்தி நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும்.


நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் நல்ல சம்பாத்தியமும் உண்டாகும். ஆசை நாயகிகள் ஏற்படுவர் கெட்ட சகவாசங்களும் உண்டாகும். சகல வசதிகளும் உடைய வாழ்க்கை அமையும்.


நான்காமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு சுகபாக்கியங்கள் விருத்தியாகும். செல்வமும் வசதிகளும் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும்.


நான்காமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மேலான கல்வியும் ஞானமும் புத்தியும் உண்டாகும். மந்திரி பதவி போன்ற பெரிய பதவிகள் உண்டாகும். பலவிதமான சுகங்களும் சௌக்கியங்களும் உண்டாகும் உற்றார் உறவினர், சகோகரர்கள் பந்துக்கள் புடை சூழ எல்லோருக்கும் இனியவனாக வாழ்க்கை நடத்துவான்.


நான்காமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மிகவும் மேலான வாழ்க்கையே உண்டாகும் பக்தியும் மேலான விஷயங்களில் ஈடுபாடும் சொந்த சம்பாத்தியங்களால் மேன்மையும் உண்டாகும்.


நான்காமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பகைவர்களால் சுபக்குறைவும் தன் வீடு முதலான சொத்துக்கள் அன்னியர்களால் அபகரிக்கப்படுதலும் தன் தாயே தன் விரோதமாதலும் திருட்டுத்தனம் போன்ற கெட்ட காரியங்களில் பிரவேசமும் பில்லி சூனியம் போன்றவைகளால் கஷ்டங்களும் உபாதைகளும் உண்டாவதுமாகும்.


நான்காமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவியால் சுகபாக்கியங்கள் அடைய நேரிடும். மாமனார் வீட்டு மாப்பிள்ளையாக ஆகிவிடுவதும் உண்டு. மற்றவர் முன்னிலையில் ஊமைப்போல் இருக்கும்படியான நடத்தையும் ஏற்படும். வித்தை வாகனம், புகழ் எல்லா வசதிகளம் உண்டாகும்.


நான்காமாதிபன் எட்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஏதாவத ஒரு முயற்சியில் சுகங்களைத் தியாகம் செய்து வாழ நேரிடும். பெரிய விஞ்ஞானிகள், புதுமைகளைக் கண்டு பிடிப்பவர்கள் யாத்ரீகர்கள் மலை ஏறிகள் ஞானிகள் முதலியவர்களின் ஜாதகங்களில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு ஏற்படுவதுண்டு.


நான்காமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தினால் சுகபாக்கியங்களை அடைவதும் கல்வி மேன்மையும் வாகனசுகமும், தந்தையின் தொழில் அல்லது அவரால் ஸ்தாபிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனத்தால் மேன்மையும் சகல சுகங்களும் உண்டாகும். டாக்ஸி, பஸ் தொழில்கள் மேன்மையடையும்.


நான்காமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மையால் சுகபாக்கியங்களை அடைவான். தன் சொந்த முயற்சியால் ஒரு தொழிலை ஸ்தாபித்து பிரபலமாக மேன்மைக்கு கொண்டு வர முடியும் தீர்த்த யாத்திரை ஸ்தலதரிசனம் போன்ற புண்ணிய லாபங்களும் ஏற்படும்.


நான்காமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சி இன்றியே சகல சுகபோகங்களும் வந்தடைவதும் பொழுது போக்காக செய்யும் தொழில்களாலும் நல்ல லாபங்களும் ஆயினும் மனதில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருப்பினும் இளமையிலேயே தாயை இழந்து விட நேர்வதும் உண்டு.


நான்காமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்போதும் நோயாளியாக இருப்பான். தன் சொந்த முயற்சியில் சுயராஜ்ஜித சொத்துக்களைச் சம்பாத்திப்பான் பலவித தான தர்மங்களைச் செய்து புகழடைவான். எவ்வளவு சம்பாதித்த போதிலும் தான் ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனக்குறையுடன் இருக்கும்படி நேரிடும்.

 
ஐந்தாமாதிபன் தசை/புத்தி

ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில் திறமையும் புகழும் ஏற்படும். சூரியன் அல்லது புதனாக இருந்தால் துப்பறியும் வேலை பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருள்களை கண்டு பிடித்தல் போன்ற திறமைகளும் உண்டாகும். செல்வமும் புகழும் ஏற்பட்டு மேலான வாழ்க்கை அமையும்.


ஐந்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எதிர்பாராத தனலாபங்கள் உண்டாகும். பந்தயம் சூதாட்டம் ஹேஷ்ய வியாபாரங்கள் முதலியவற்றில் லாபங்கள் உண்டாகும். வெகு செல்வந்தராகவும் முன்கோபியாகவும் இருக்க நேரிடும்.


ஐந்தாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் பொருள் இலாபம், காமசுகம் முதலியவை பற்றிய சிந்தனையாக இருப்பதும் வெகுகாலம் கழித்து புத்திர பாக்கியம் உண்டாதலும் தன் பிள்ளைகளிலோன்று பிரபலம் அடைந்து தனக்கு உதவியாக அமைவதும் உண்டாகும். புத்திர தோஷங்களும் ஏற்படும்.


ஐந்தாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனமும், புகழும் சுக வாழ்க்கையும் உண்டாகும். பெண்ணாக இருந்தால் நீண்டகாலம் தாய் வீட்டிலேயே இருந்து சகல சௌக்கியமாக இருப்பாள். மந்திரி பதவி அல்லது பெரிய ஆசிரியர் பதவியும் உண்டாகும். கல்வி மேன்மையால் புகழும் இலாபங்களும் உண்டாகும். பெரிய பதவியும் கிடைக்கும்.


ஐந்தாமாதிபன் ஐந்தாமிடத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால் அத்திசையின் ஆரம்பத்தில் புத்திர தோஷங்கள் உண்டாகும். மேலான அறிவும் ஞானமும் உலகம் புகழத்தக்க குரு பதவியை அடைவதும் உண்டாகும் கல்விச் செருக்கால் சட்டென்று கோபம் கொள்பவராக இருப்பார்.


ஐந்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பிள்ளைகளே தனக்குச் சத்துரு ஆதலும் அவர்களால் மனோ வியாகூலங்களும் உண்டாகும். பிள்ளைகள் சுய சம்பாத்தியத்தால் முன்னுக்கு வருவார்கள்.


ஐந்தாமாதிபன் ஏழாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் தன் எதிரிகளையும் வசப்படுத்தி நடத்தும் திறமையும் மேலான பதவியும் புகழும் மேலும் மேலும் முன்னேற்றங்களும் உண்டாகும்.


ஐந்தாமாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் காசநோய் அல்லது வயிற்று நோய்களால் பலத்தத் தொல்லைகளும் நல்ல மனமில்லாதவராக வெறுக்கத் தக்க நடத்தையும் புத்திரசுகம் இல்லாமையும் உண்டாகும். பெரும்பாலும் பெண் குழந்ததைகளே உண்டாகும்.


ஐந்தாமாதிபன் ஒன்பது அல்லது பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகல பாக்கியங்களும் நிறைந்த மேலான வாழ்க்கை உண்டாகும், எல்லோராலும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரிய ஆசிரியர் அல்லது கவிஞராகப் புகழ் பெறுவார். அரசர்களுக்குச் சமானமான வாழ்க்கை உண்டாகும். தன் குழந்தைகளும் மேலுக்கு வந்து புகழும் பெருமையும் எல்லோராலும் கொண்டாடத்தக்க நிலையும் அடைவார்கள்.


ஐந்தாமதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெகு செல்வமும் அநேக புத்திரர்களும், அதிகமான புகழும் உண்டாகும். ஜனத் தலைமையும் புகழும் உண்டாகும்.


ஐந்தாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனக்குப் புத்திரர் இல்லாமல் தத்து எடுத்து அல்லது விலைக்கு ஒரு பிள்ளையை வாங்கி வளர்க்க நேரிடும். புத்திரபாக்கியம் ஏற்பட்ட போதிலும் தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்தோ, மறைந்தோ, போகும்படியாக நேரிடும் தனக்கும் பிள்ளைகளுக்கும் சரியான உறவு இருக்காது. பிள்ளைகளால் கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகும், சதாகலமும் காமசிந்தையாய் பொருள் விரயம் செய்ய நேரிடுவது உண்டு.


ஆறாமாதிபன் தசை/புத்தி

ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும்.


ஆறாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலையான தனமில்லாது அவதிபடுதல் தன் சொத்துக்கள் அன்னியரால் கவரப்படல் வாக்கினால் விரோதங்கள் ஏற்படுதல் குடும்ப சுகமின்மை முதலான தீயபலன்கள் நடைபெறும் பகைவர் அல்லது கள்வராலும் நோய்களாலும் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்.


ஆறாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் லாபங்களும் அன்னியர் பொருள்களை தான் அபகரித்தலும் நண்பர்கள் சகோதரர்களுடன் விரோதங்களும் பொய் வஞ்சகம் கோள் சொல்லுதல் போன்ற கெட்ட குணங்களும் உண்டாகும்.


ஆறாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திரம் எவ்விதத்திலும் சுகம் இல்லாமை சரியான கல்வி இல்லாததால் கீழான வேலைகளைச் செய்து பிழைத்தல் கஷ்ட ஜீவனம் முதலானவை உண்டாகும்.


ஆறாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர நஷ்டங்களும் புத்திர விரோதங்களும் உண்டாகும் அதிகமான கல்வி வசதியோ சூட்சும அறிவோ ஏற்படாத போதிலும் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தலும் திருட்டு புத்தியும் தீயவர் நேசமும் கெட்ட காரியங்களில் மனம் செல்வதும் பெண்களிடம் விரோதமும் உண்டாகும்.


ஆறாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், முரட்டுத் தைரியமும் வீரசாகச செயல்களில் விருப்பமும் அவ்வழியே பணம் சம்பாதித்தலும் தன்னுடைய சொந்த பந்துக்களை விரோதம் செய்து கொண்டு அந்நிய பந்துக்களை அடைவதும் சத்துரு ஜெயமும் அதனால் பணவசதிகளும் உண்டாகும் திடீரென்று கண்டங்களும் ஏற்படலாம்.


ஆறாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு தனக்கு விரோதமாகவும் அல்லது பயத்தால் அடங்கி ஒடுங்கி நடப்பதும் பகை இல்லாமையும் கல்வி செல்வம் இருந்தபோதிலும் தொழில் முதலானவற்றிலும் ஈடுபாடு கொள்ளாமலும் யார்மேலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், அற்ப லாபங்களும் அற்ப சுகங்களும் உண்டாகும்.


ஆறாமாதிபன் அஷ்மத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் திடீரென்று மரணபயம் உண்டாகும் அல்லது சதா ரோகத்துடன் அழுந்திக்கொண்டு கிடக்க நேரிடும். பெண்ணாக இருந்தால் கணவன் மரணமடைவான் தரித்திரமும் கஷ்டங்களும் பலவிதமான துக்கங்களும் உண்டாகும்.


ஆறாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை, தந்தையின் சொத்துக்கள் முதலானவற்றை இழக்க நேரிடுவதும் சுகபாக்கியங்கள் குறைவும் மரம் வெட்டுதல், கல் உடைத்தல் போன்ற தொழில்களைச் செய்து ஜீவிக்க நேர்வதும் உண்டாகும்.


ஆறாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் முடக்கமும், அன்னியர் தயவால் பிழைக்க நேர்வதும் புகழ்கீர்த்தி நஷ்டமும் உண்டாகும் தொழில் அல்லது வியாபாரத்தில் கடன்காரர் அபகரித்துக் கொள்வார்கள் நோயால் பொருள் நாசம் உண்டாகும்.


ஆறாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கஷ்ட ஜீவனமும் மூத்த சகோதரனுக்கு கண்டமும் அன்னிய பெண்களின் சேர்க்கையும் அதனால் பொருள் நஷ்டங்களும் உண்டாகும். அன்னியருடைய சொத்துக்கள், பெண்கள் மேல் நாட்டமும் அவற்றைத் தனக்கு உடைமை ஆக்கிக்கொள்வதும் உண்டாகும்.


ஆறாமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், கல்நெஞ்சமும் ஜீவஹிம்சையும், பாவகாரிய சிந்தனையும் கொலை களவு காமம் போன்ற தீய வழிகளிலேயே நடப்பதும் அவ்வழியிலேயே பணத்தைச் சேர்த்துக் தானும் அனுபவிக்காமல் புதைத்து வைப்பதும் தலைமறைவாக வசிக்க நேர்வதும் உண்டாகும்.


ஏழாமாதிபன் தசை/புத்தி

ஏழாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையில் பெண்களை சுற்றி அலையும் நடத்தையும் எப்பொழுது காமசிந்தனையாய் இருக்கும். மனைவிக்கு அடங்கிய கணவனாக இருப்பதும் அந்நிய பெண்களின் மேல் நாட்டமும் வெளியூர் சஞ்சாரமும் கூட்டு வியாபாரங்களில் இலாபங்களும் உண்டாகும்.


ஏழாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் சம்பாத்தியமும் அவர்களாலேயே செலவுகளும் வழக்குகளால் பொருள் நஷ்டமும் அவமானங்கள் அபாயங்களும் உண்டாகும்.


ஏழாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குழந்தைகள் கர்ப்பத்திலேயே இறந்து பிறக்கும் மனைவியால் சுகம் உண்டாகாது சுமாரான இலாபங்களும் வெளியூர் சஞ்சாரமும் பிராயணங்களின் மூலம் நடக்கும் தொழில்களின் விருத்தியும் உண்டாகும்.


ஏழமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காம வேட்கையும் எப்பொழுதும் பெண்களே கதி என்று கிடப்பதும் தன் மனைவிக்கு கெட்டப்பெயர் உண்டாவதும் புதுக்காரியங்களில் ஈடுபாடும் அரசியல் வெற்றிகளும் உண்டாகும்.


ஏழாமதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல நடத்தையும் குணங்களும் உண்டாவதும் நற்குணமும் நன்னடத்தையும் உடைய மனைவி வாய்க்கப் பெறுவதும் மேலான நடத்தையும் சகல சம்பத்துக்களும் நிரம்பிய வாழ்க்கை உண்டாவதும் கூடும்.


ஏழாமதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவி தன்னைக்காட்டிலும் அதிகமான காமியாக இருத்தலும், அவளால் பொருள் செலவும் நோய்களும் உண்டாவதும் சுகம் இல்லாமையும் உண்டாகும்.


ஏழாமதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் புகழும் பேறும் அடைவதும், மனைவிக்கு அடங்கி கணவனாக இருப்பதும், தனக்கென்று எதுவும் இல்லாத அற்பஜீவனமும் உண்டாகும்.


ஏழாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயாளியான மனைவியை அடைந்து அவளுடைய பணத்திற்காக அல்லது வேறு காரணத்தால் அடிமையைப்போல் இருக்க நேர்வதும் தன் சொத்துக்களை அன்னியரிடம் இழந்து விட நேர்வதும் பிரயாணத்தில் கஷ்டங்களும் உண்டாகும்.


ஏழாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஜாதி மதங்களைச் சேர்ந்த பெண்களின் மேல் மோகமும் பெண்களால் பாக்கியம் உண்டாவதும் அவர்களாலேயே வாழ்க்கை நடைபெறுவதும் உண்டாகும். நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்கத்தக்க பெரும் காரியங்களிலேயே ஈடுபாடும் ஏற்படும்.


ஏழாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் வாசம் அன்னியதேசச் சஞ்சாரம் முதலியன உண்டாகும். வெளியூர்களில் தொழில் உண்டாகும் மனைவி கெட்ட நடத்தை உடையவளாக கெட்ட பெயர் ஏற்படும்.


ஏழாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் அல்லது பெண்கள் விரும்பத்தக்கப்பொருட்களைத் தொழில் அல்லது வியாபாரங்களில் லாபங்களும் அதிகமான காமவேட்கையும் உண்டாகும்.


ஏழாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சுய முயற்சியின்றி அந்நியர் சொற்கேட்டு நடப்பதும் தரித்திரமும் கஷ்டங்களும் மனைவிக்கு நோய் ஏற்பட்டு அவளால் பொருட் செலவுகளும் காமவேட்கைக் காரணமாக தன நஷ்டங்களும் உண்டாகும்.

 
அஷ்டமாதிபன் தசை/புத்தி

அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும். எப்பொழுதும் பொருட் செலவுகளும் தனவிரயங்களும் ஏற்படும். தரித்திர வாழ்க்கையும் அற்ப ஜீவனமும் உண்டாகும்.


அஷ்டமாதிபன் இரண்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் நஷ்டங்களும் அந்நியரை நம்பிப் பிழைக்கும் படியான நிலைமையும் குடும்பத்தைவிட்டு பிரிந்து வசிப்பதும் ஆண்டி போன்ற நிலைமையும் தன் சொற்களுக்கு மதிப்பு இல்லாமையும் எல்லோராலும் பரிகாசம் செய்யத்தக்க வாழ்க்கையும் உண்டாகும்.


அஷ்டமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டம், பூமி, பொருள் நஷ்டங்களும், தைரியமின்மை பலக்குறைவும் நபும்ஸகத் தன்மையும் உண்டாகும்.


அஷ்டமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்குக் கண்டம், வீடு வாசல் வாகன நஷ்டம், தரித்திர வாழ்க்கை, உற்றார் உறவினர்களைப் பிரிந்து யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாக இருக்கும் நிலைமை முதலியன உண்டாகும்.


அஷ்டமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர சோகம் உண்டாதல் பைத்தியம் சித்தப்பிரமை அல்லது புத்தி மாறாட்டம் எற்படல் வயிற்றில் ரோகங்கள், வாக்கிய நாசங்கள் மாமன் வர்கத்திற்கும் கஷ்டங்கள் முதலியன உண்டாகும்.


அஷ்டமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சந்ததி நாசம், தனக்கும் கண்டங்கள் சர்பபயம், உயரத்திலிருந்து விழுவதால் அபாயம், வாதரோகத்தால் கால்கள் முடக்கம், பொருள் நஷ்டங்கள் சகலவிதமான துன்பங்களும் உண்டாகும் மரணமும் ஏற்படக்கூடும்.


அஷ்டமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு கண்டம், இரண்டாவது மனைவி ஏற்படல் தன் மருமகனுக்குக் கண்டம், பிரயாணங்களில் அபாயம், அந்நியரால் பொருள்கள் கவரபடல், வழக்கு வியாஜ்ஜியங்களில் தோல்வி போக சக்திக் குறைவு முதலிய பலன்கள் உண்டாகும்.


அஷ்டமாதிபன் அஷ்டமத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால், வஞ்சனை, களவு போன்ற கெட்ட வழிகளிலும் குறுக்கு வழிகளிலும் பணம் சம்பாதித்தல் மனைவிக்கு கெட்ட பெயர் உண்டாதல் மனைவியின் சம்பாதியத்தால் அல்லது அன்னியர் தனத்தால் பிழைப்பு நடத்துவது போன்ற பலன்கள் உண்டாகும்.


அஷ்டமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் துணிந்து பாவங்களை செய்வதும், தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபடுதலும், அன்னியர் சொத்துக்கள், மனைவியர் மீது ஆசை கொண்டு கவர முயற்சிப்பதும் அதனால் கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைவது தர்மம், ஒழுங்கு மதம் ஆகியவற்றுக்கு எதிரான நடத்தையும் பிரச்சாரம் செய்வதும் உண்டாகும்.


அஷ்டமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நாசம், பெயர் மங்குதல் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள அல்லது அவற்றைச் செய்ய நேர்தல் நாடுவிட்டுச்செல்லல் சென்றவிடத்தில் எல்லாம் கஷ்டங்கள், பிச்சைக்காரனுக்குச் சமமான வாழ்க்கை முதலியன உண்டாகும்.


அஷ்டமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மூத்த சகோதரன் மரணம், தான் சம்பாதித்த எல்லாப் பொருள்களையும் இழந்து தரித்திரமடைதல், தன் பிள்ளைகளுக்குத் திருமணம் முதலான சுபகாரியங்களைச் செய்து வைக்க முடியாத கஷ்டங்கள், அதனால் மனோதுக்கம் முதலியவை உண்டாகும்.


அஷ்டமாதபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான கஷ்டங்கள் மனோதுக்கங்களும் ஆண்மைக் குறைவும், நித்திரை இல்லாது தவிக்கும் படியான நிலைமையும், கெட்ட நடத்தையும் பாவ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும்.

 
ஒன்பதாமாதிபன் தசை/புத்தி

ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை மேலான எண்ணங்கள் புகழ் முதலியன விருத்தியாவதும் ஆக மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மேலும் மேலும் பொருட்சேர்க்கையும், சகல வித்தைகளிலும் பண்டிதனாகி புகழும் பெருமையும் அடைவதும் கதா காலட்சேபம் அல்லது ஆன்மீகப் பிரசங்கங்கள் மூலம் தனமும் புகழும் சேர்வதும் மனைவியிடம் அதிகமான பிரியமும் புத்திரபாக்கியங்களும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதரர்கள் உண்டாவர். சகோதரர்களுக்கு நன்மை உண்டாகும். செல்வம் சொத்துக்களின் மேல் அதிகமான இச்சையும் அவற்றை அடைவதற்கான கடும் முயற்சியும் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களுக்குச் சில விரயங்கள் ஏற்படும்.


ஒன்பதாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியில் மேன்மையும் அழகாகப் பேசும் சாமர்த்தியமும் பெரிய அதிகாரியாக அல்லது தொழிலதிபராக அல்லது இராஜ்யாதிகாரியாக உயர்வு பெறுவதும் அரசாங்க கொளரவங்களும், புகழும் பாராட்டும் மகோன்னதமான நிலைமையும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தர்ம காரியங்களிலேயே மனம் செல்வது மேலும் மேலும் பாக்கிய விருத்தியும் திருமணம் மக்கட்பேறு போன்ற சுகங்கள் உண்டாவதும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதும் குருபூஜை சிவபூஜை முதலான காரியங்களில் ஈடுபடுதலும் தீர்த்தயாத்திரையும் தயாள குணமும் நீடித்து நிற்கும் படியான தர்மகாரியங்களை செய்து வைத்தலும் அதனால் புகழ் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தை இழந்து இளமையிலேயே தரித்திரத்தை அடைவதும் அம்மான்மாரால் வளர்க்கப்படுவதும் நோய்களாலும் பகைவராலும் சொத்துக்கள் அழிவும் கஷ்டங்களும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல மனைவியும் அவளால் சுகபாக்கியங்களை அடைவதும் உண்டாகும். அவன் திசையில் மேலும் மேலும் பொருள் இலாபங்களும் முயற்சிகளில் வெற்றியும் பிரயாணங்களால் நன்மைகளும் புகழும் சந்தோஷமும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையிலிருந்தே வறுமை அனுபவிக்க நேரும். தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்கள் நாசம், மூத்த சகோதரர்களுக்குக் கஷ்டங்கள் எவ்வித பாக்கியமும் இன்றி பிறர் கையை எதிர்பார்த்து வாழும்படியான நிலை, மேலும் மேலும் துக்கம் முதலானவை உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பல வழிகளிலும் சொத்து சுகங்கள் உண்டாவதும் இராஜ்யாதிகாரி அல்லது மடாதிபதி போன்ற உயர்ந்த பதவி ஏற்பட்டு புதுச்சொத்துக்களை நிர்வாகம் செய்யும்படியான வாய்ப்புக்கள் உண்டாவதும் தான தர்மங்களால் வெகு புகழை அடைவதும் குடும்பத்தில் சகல நன்மைகளும் ஏற்படுவதும், தன் சகோதரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.


ஒன்பதாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அற நிலையங்களில் உத்தியோகம் அல்லது அவற்றின் நிர்வாக பொறுப்பை ஏற்றல் கிராமம் நகரம் அல்லது நாட்டின் தலைவராதல் வெகு புகழ் வெகு சம்பாத்தியம் சன்மானங்கள் முதலான சகல நன்மைகளும் உண்டாகும்.


ஒன்பதாமதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அநேகவித சன்மானங்களை அடைவதும் பந்தயம் சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில் வெற்றியும் காதல் கேளிக்கைகளில் விருப்பமும் தயாளகுணமும் உண்டாகும்.


ஒன்பதாமதிபன் பன்னிரேண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தையின் சொத்துக்கள் விரயமாதல் தரித்திர வாழ்க்கை, மிகவும் கஷ்ட ஜீவனம் முதலியவை உண்டாகும்.


பத்தாமாதிபன் தசை/புத்தி

பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்.


பத்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும்.


பத்தாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் தன் சகோதரர்களை அண்டிப்பிழைக்கும் நிலைமையும், அல்லது சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனமும் சிறு சிறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விடுதலும் எதிலும் நிலையற்ற தன்மையும் உண்டாகும்.


பத்தாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேம்பாட்டால் உயர்ந்த பதவி அடைதலும் வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான விருத்தியும், குருபக்தி, தெய்வபக்தி, முதலானவைகளும் தாய் தந்தையரிடம் விஸ்வாசமும் அவர்களுக்கு நன்மையும் ஏற்படுதலும் புகழ் பராக்கிரமம் பாக்கியம் ஆகியவை விருத்தியாவதும் உண்டாகும்.


பத்தாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தனலாபங்களும் பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தி வெற்றியடைதலும் தொழிலிலே கவனமாக இருப்பதும் தொழில் சம்பந்ததப்பட்டதையும் வெகு விரைவில் கிரகித்து கொள்ளும் தன்மையும் புத்திர லாபமும் தன் மக்கள் தனக்கு மீறிய அறிவும் செல்வமும் உடையவராதலும் அல்லது தன் பிள்ளைகளிலோருவன் தனக்கு அடங்காமல் பிரிந்து போய் விடுவதுமான பலன்கள் நடைபெறும்.


பத்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் தொழில் புகழ் முதலியவற்றை எதிரிகள் கைகொள்வதும் அல்லது அவற்றை வேறொருவனுக்கு விற்றுவிட்டு தான் புதிய தொழிலை ஆரம்பிக்க முயல்வதும் தொழில் இல்லாமல் அலைய நேர்வதும் பிற்பகுதியில் தொழில் வாய்ப்பும் சுகமும் உண்டாவதும் உண்டாகும். மொத்தத்தில் அலைச்சலும் கஷ்டங்களுமே அதிகமாக இருக்கும்.


பத்தாமாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் அல்லது அன்னிய நாட்டில் தொழில் ஏற்படுவதும் மனைவியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகள் உண்டாவதும் மனைவியின் பணத்தைக்கொண்டு தொழில் நடத்தி மேலான நிலைக்கு வருதல் போன்ற பலன்கள் உண்டாகும். பாபக்கிரமாக இருந்தால் கெட்ட வழிகளில் சம்பாத்தியம் ஏற்படும்.


பத்தாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயின் காரணமாக தொழில் முடக்கம் ஏற்படும். அபவாதம், கெட்டப் பெயர், தொழில் நஷ்டங்கள் பலத்த நஷ்டம் முதலானவை ஏற்படலாம். எவ்வித தொழிலும் இல்லாமலும் அன்னியரை அண்டிப் பிழைக்கும் படியான நிலைமையும் தேசாந்திரம் போகும்படியான நிலைமைகளும் உண்டாகும்.


பத்தாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னை தந்தையர் தெய்வகுருபக்தி அவர்களுக்கு சுகமும் ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் நெறிதவறாத நடத்தையும் ஏற்படுவதும், அதிகமான பாக்யம் புகழ் இல்லாத அடக்கமான வாழ்க்கையும், துறவு பூணும்படியான அல்லது சன்யாச மனப்பான்மையும் உண்டாகும்.


பத்தாமாதிபன் பத்தாமிடத்தலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேன்மையும் மேலான தொழிலில் தலைமை ஸ்தானமும் புகழும் உண்டாகும். தொழிலில் நேர்மையும் முறை பிசகாத பண்பும் சத்திய நெறி நடத்தலும் புகழும் கௌரவமும் உண்டாகும்.


பத்தாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் மேலான நிலைமையும் தன் முயற்சி இன்றியே லாபங்கள் உண்டாதலும் பலவிதமான வருமானங்களால் சொத்து சுகம் ஏற்பட்டு எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தலும், புத்திரலாபங்களும், புத்திரர்க்கு சுகங்களும் உண்டாவதுமாகும்.


பத்தாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நஷ்டங்களும் எவ்விதத் தொழிலும் செய்ய சக்தியில்லாதவனாக இருப்பதும் தொழிலில் பகைவரால் நஷ்டங்களும் அடிமைப் பிழைப்பும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் தசை/புத்தி

பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.


பதினொன்றாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.


பன்னிரண்டாமாதிபன் தசை/புத்தி

பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.


பன்னிரெண்டாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.


பன்னிரெண்டாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.


பன்னிரெண்டாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.