ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, March 15, 2014

மாயை






மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகே மாயை என்று ஞானிகள் சொல்கிறார்கள். உலகில் பலவற்றை கண்ணால் பார்க்கிறோம். தொட்டு உணர்கிறோம். எத்தனையோ நிகழ்வுகள் உலகில் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் நாமும் பங்கு கொள்கிறோம். இப்படி எல்லாம் இருக்கையில் உலகே மாயை என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்தக் கேள்விக்கு ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பதிலைப் பார்ப்போம்.
கிருஷ்ண பரமாத்மாவிடம் நாரதர் மாயை என்பது என்ன என்று விளக்கும்படி ஒரு முறை கேட்டுக் கொண்டார்.
”எனக்குத் தாகமாக இருக்கிறது. எனக்குக் குடிக்க சிறிது தண்ணீர் கொண்டு வா. நான் பிறகு விளக்கம் தருகிறேன்” என்றார் கிருஷ்ணர்.
நாரதர் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர அருகில் இருந்த ஆற்றிற்குச் செல்கிறார். சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நிமிரும் போது ஆற்றங்கரையில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவள் அழகின் வசப்பட்ட அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவளைக் கேட்கிறார்.
அவளோ சற்று தள்ளி வசிக்கும் தன் பெற்றோரிடம் சம்மதம் கேட்கச் சொல்கிறாள். நாரதர் அவளுடைய பெற்றோரிடம் சென்று சம்மதம் வாங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி பல குழந்தைகள் பெறுகிறார்.  ஒரு நாள் ஆற்றில் பெருவெள்ளம் வருகிறது. அந்த வெள்ளத்தில் சிக்கி அவரது மனைவியும், குழந்தைகளும் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
தாங்க முடியாத துக்கத்துடன் நாரதர் அழுது கொண்டிருக்கையில் கிருஷ்ணர் வந்து கேட்கிறார். தண்ணீர் கொண்டு வர வந்தவன் சொம்புத் தண்ணீருடன் ஏன் இங்கேயே நிற்கிறாய்?
நாரதருக்கு அப்போது தான் கிருஷ்ணர் கேட்டு இங்கு தண்ணீர் எடுத்து வர தான் வந்தது நினைவுக்கு வருகிறது.  தன் கையில் சொம்புத் தண்ணீர் அப்படியே இருப்பதையும், அதே உடைகளுடன் அப்படியே தான் இருப்பதையும் அவர் கவனிக்கிறார். திகைப்புடன் நாரதர் கிருஷ்ணரைக் கேட்கிறார். அப்படியானால் இது வரை நடந்ததும், நான் கண்டதும்?

அது தான் மாயை” என்று கிருஷ்ணர் விளக்கினார்.
இந்த மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த சில நிமிடக் கனவில் மிக நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும் உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை அனைத்தும் நிஜமாகவே தெரிகிறது. விழித்த பின் தான் நிஜமல்ல என்பதை உணர்கிறோம்.
விழிக்கும் வரை கனவு நிஜம் தான். விழிக்காமலேயே கனவு தொடருமானால் அது உண்மை என்ற நம் அபிப்பிராயமும் அப்படியே தொடரும். அதே போல ஆத்ம ஞான விழிப்புணர்வு வரும் வரை இந்த உலகம் நிஜம் போலவே தோன்றும் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.  
மாயை என்றால் முற்றிலும் பொய்யானது, உண்மையின் அடிப்படையே இல்லாதது என்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். அது சரியான அர்த்தம் ஆகாது. மாயை என்பதைத் தற்காலிகத் தோற்றம் என்பதாகச் சொல்லலாம். உதாரணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம். கானல் நீர் கண்ணுக்குத் தெரிவது நிஜம். அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனால் அப்படித் தெரியும் கானல் நீர் ஒருவரின் தாகம் தீர்க்க உதவாது. கண்ட காட்சியை நிஜம் என்று தாகத்தோடு அதை அணுகினால் செல்பவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
உண்மையை அறிந்தவர்கள் தங்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் கானல் நீர் உண்மை அல்ல தோற்றமே என்பதை உணர்வது போல ஞானிகளும் உலகம் என்பதை தற்காலிக தோற்றமாகவும், நிரந்தர உண்மை அல்ல என்றும் உணர்வதால் தான் உலகமே மாயை என்று கூறுகிறார்கள்.
திடப்பொருள்களைப் பிளந்து கொண்டே போய் கடைசியில் அணுவைக் கூட பிளந்து பார்த்த அணு விஞ்ஞானிகள் கடைசியாக மிஞ்சுவது சக்தி அலைகளே என்றும் திடப் பொருள் என்று சொல்ல முடிந்த ஒரு துகள் கூட இல்லை என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் வெளித் தோற்றத்தில் அப்படியா தெரிகிறது? பாறை, நாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, இரும்புக் கம்பி எல்லாம் திடப்பொருள் போல் அல்லவா தெரிகிறது. இதிலேயே  சாதாரண பாமரனின் பார்வையும் விஞ்ஞானியின் அறிவும் வேறு வேறாக அல்லவா இருக்கிறது. இந்த உதாரணத்திலும் கூட நாம் காணும் உலகம் மாயை என்பதை விஞ்ஞானமும் சேர்ந்து அல்லவா சொல்கிறது!
அப்படி என்றால் மாயை என்பது இகழத் தக்கதா என்று கேட்டால் அல்ல என்பதையே நம் ஞானிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கான வழி மாயையை வெறுத்து ஒதுக்குவதோ,  மாயையை ஒரு தடையாக நினைப்பதோ  அல்ல என்றும் அப்படிச் செய்வது ஞானத்தைத் தந்து விடாது என்றும் அவர்கள் நம்பினார்கள். மாயையை அறிந்துமாயையை உணர்ந்துமாயையை அனுபவித்து, அதன்பின் மாயையைக் கடந்து செல்வதே ஞானம் அடையும் வழி என்று அவர்கள் கருதினார்கள்.
”என்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மமாக  இருக்கையில்  நானே மாயையாக இருக்கிறேன்” என்று கிருஷ்ணர்  குறிப்பிடுகிறார்.