ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, February 26, 2014

சிவராத்திரி





பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருவரில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு,  முற்றிய சண்டையை நிறுத்தவும், உண்மையில் பெரியவர் யார் என்று அவர்களுக்கு உணர்த்தவும், சிவபெருமான் பெரும் நெருப்பை உமிழும் ஜோதி ஸ்தம்பமாக வானளாவ உயர்ந்து நின்றார்.

இதன் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டறிந்து வருகிறார்களோ அவரே பெரியவர் என்று ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார்.

உடனே பிரம்மா அன்னப் பட்சியாக விண்மீது பறந்து முடியைக் காண விரைந்தார்.

விஷ்ணு வராக வடிவம் கொண்டு நிலத்தை தோண்டிக் கொண்டே அடியைக் காண விரைந்தார். முடிவில் விஷ்ணு தன்னால் அந்த ஜோதியின் அடியைக் காணமுடியவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

முடியைத் தேடிச் சென்ற பிரம்மனோ வழியில் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பிடித்து விசாரிக்க, அது ஜோதிஸ்தம்பத்தின் உச்சியிலிருந்து தவறிக் கீழே ரொம்ப காலமாய் வந்து கொண்டிருப்பதாகச் சொல்ல, பிரம்மாவுக்குச் சடாரென்று ஒரு யோசனை. தாழம்பூவைச் சரிகட்டி ஒரு பொய்சாட்சி தயார் செய்துவிடுகிறார். அதாவது அவர் முடியைப் பார்த்து விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி என்றும்!

ஆனால் இறுதியில் உண்மை தெரிகிறது, இருவருமே அடியையும் முடியையும் காணாதவர்கள்தான் என்று. பிரம்மா பொய் சொன்னதால் அவருக்குப் பூலோகத்தில் தனியாகக் கோயில் இல்லாமல் போனது.

தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதுவும் சிவபெருமான்
தன் தலையில் சூடும் அரிய பெருமையையும் இழந்தது.

இவ்வாறு அயன், அரி இருவருக்கும் தானே முழுமுதற் கடவுள் என சிவன் உணர்த்திய வடிவம்தான் லிங்கோத்பவர். ஜோதிலிங்கமாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் தோன்றிய அந்த இரவே மகா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
இறைவன் லிங்கோத்பவராகத் தோன்றியது திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. இங்கு சிவன் தீ மலையாக வெளிப்பட்டதால் இது பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக வணங்கப்படுகிறது.

 பிரம்மா, விஷ்ணு சண்டைக் கதையில் பொதித்திருக்கும் உண்மையை நாம் உணரவேண்டும். அதுதான் நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கான உண்மையான பலன்.

பிரம்மா அறிவு வடிவினர். திருமாலோ லஷ்மியையே
தன் இருதயத்தில் வைத்திருக்கும் செல்வத்தின் நாயகன்.
வெறும் அறிவாலோ, செல்வத்தாலோ இறைவனைக் காண முடியாது.
அறிவும் செல்வமும் அகங்காரத்தைத்தான் வளர்க்கும்.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முடியும் அடியும் அகப்படவில்லை என்று சொல்வதன் தாத்பரியம் , பரமாத்மா ஆதியும் அந்தமும் இல்லாத, சிருஷ்டி பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து என்பதுதான்.

இப்படி அடி, முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார்.

மகா சிவராத்திரியன்று காலையில் நித்திய கடன்களை
முடித்துவிட்டு சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
உண்ணா நோன்புடன் திருமுறைகளைப் பாராயணம் செய்யவேண்டும்.

இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் நடைபெறும் சிவபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணிவரை  4 ஜாமங்களிலும் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக, அர்ச்சனைகளைக் கண்டும், சிவபுராணம், பன்னிரு திருமறைகள் ஆகியவற்றை ஓதியும் சிவசிந்தனையில் இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் தத்தம் இல்லங்களிலும் இவ்வாறு பூஜிக்கலாம்.

சிவதரிசனத்திற்குப் பிரதோஷ காலம் மிக ஏற்றது .

இந்தப் பிரதோஷ காலத்தைப் போலவே ""லிங்கோத்பவ காலமும் சிவதரிசனத்திற்கு மிகமிக உகந்தது.

மாசிமாதத் தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமான சதுர்த்தசி திதி இரவில்தான் சிவபெருமான் ஜோதிலிங்கமாக அடியும் முடியும் காணமுடியாத லிங்கோற்பவ மூர்த்தியாக தரிசனம் தந்த நேரம்.

மகா சிவராத்திரி தினத்தன்று இரவு 11.30 மணிமுதல் பின்னிரவு 1.00மணி வரை (ஒன்றரை மணி நேரம்) உள்ள நேரமே லிங்கோத்பவ காலம்.

ஏனெனில் இந்தநேரத்தில்தான் சிவன் ஜோதி லிங்கமாகத்
தோன்றிய நேரம் என்பது ஐதீகம்.

இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.

பன்னிரு கோடி சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பதால் கிடைக்கும் சிவ புண்ணியத்தை சிவராத்திரி தினத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜிப்பதால் பெற்றுவிடலாம் என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சிவராத்திரியில் உண்ணாநோன்பும், கண்விழித்து சிவதியானம் செய்வதும்  புலன்களை வெல்வதற்கான முயற்சிக்கு ஒரு தூண்டுகோலாகும்..!. புலன்களை அடக்கினால் மனத்தை அடக்கலாம். மனத்தை அடக்கிவிட்டால் கிட்டாதபேறு வேறு இருக்காது..

சிவராத்திரி விரதமிருந்து சிவனை உளமாற மனம், மொழி, மெய்யால் வழிபடுபவர் உடல் நலம் சிறக்கும். மனவளம் பெருகும்.
பிறவிப்பயன் பெறலாம்..!