கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை 25.10.2019 மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் பரிதாபம் ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.
2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் 25.10.2019 மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.
குழந்தை விழுந்த முதல் நாள் மாலை 6.30 மணியளவில் குழந்தையின் கையசைவு தெரியும் போது எடுக்கப்பட்ட video.
சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.
ஆனால் 26.10.2019 அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.
சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.
கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், 29.10.2019 அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர்
சந்திரனுக்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு, 100 அடி ஆழத்திற்குள் இருந்த குழந்தையை உயிருடன் மீட்கும் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாதது மிகுந்த வேதனையான மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.