ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Thursday, November 10, 2011

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

கர வருடம், மார்கழி மாதம், 5-ம் தேதி புதன்கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திர நாளில்... சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்த யோகத்தில், சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2:17-க்கு நேத்திரம், ஜீவனும் நிறைந்த பஞ்ச பட்சியில், காகம் நடைபயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை 6:55 மணிக்கு, கன்னி ராசியில் இருந்து தன்னுடைய உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார் சனி பகவான். ஏறக்குறைய 16.12.14 வரை, துலாம் ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.

அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரரான புதனின் வீட்டில் சனி அமர்கிறார். எனவே, மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்; ஆடம்பர மோகம் அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமை பிறக்கும். துணிமணிகளின் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா மற்றும் சின்னத் திரை கலைஞர்கள், அரசாங்கத்தால் சில சலுகைகள் பெறுவர்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியாவில் நவீன வகை வாகனத் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அமையும். கிராமங்கள் அசுர வளர்ச்சி அடையும். மறுமணம் செய்வோரது எண்ணிக்கை அதிகமாகும். வேலையாட்களின் தினக் கூலியும், மாதச் சம்பளமும் உயரும். பணியாட்கள் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும். பிரபலங்களும் வாகன விபத்துக்கு ஆளாவார்கள்.

நீதிபதிகளின் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஜனநாயகம் தழைக்கும். பெயரில் M, R, P, T, V, ஆகிய எழுத்துக்களில் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்டவர்கள் பிரபலம் ஆவார்கள்.

26.3.12 முதல் 11.9.12 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்து அமர்வதால், இந்த காலகட்டத்தில் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் பாதிப்படைவார்கள். அரசாங்கத்துக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும்.

தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனி பகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ§வல் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்டம் போன்ற கல்வி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறை பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கணினித் துறை மேலும் வளர்ச்சி பெறும். ஆனால் 2014-ன் தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.

இந்தியாவின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்வதால், இங்கே தொழில் துவங்க உலகநாடுகள் போட்டி போடும். எனினும், அந்நிய நாடுகள் சிலவற்றின் ராஜதந்திரத்தால், நமது பொருளாதாரம் பாதிப்படையலாம்.

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க, அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். நவீன செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசு கவிழும் அபாயம் உண்டு. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உட்பட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி வெளியாகும்.

பசு, ஆடுகள், குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். வன விலங்குகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்றவற்றின் விலை குறையும். ஆனால் மணல், சிமென்ட், கம்பி, செங்கல் போன்றவற்றின் விலை உயரும். புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும். சுரங்கத் தொழிலும் பாதிப்பு அடையலாம்.

பேருந்து, ரயில் மற்றும் விமானக் கட்டணங்களும், சமையல் எரிவாயு விலையும் உயரும். தங்கம் விலை சற்று குறைந்து, 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012-ன் பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோலின் மதிப்பு உயரும்.

கண், பிறப்புறுப்புகள், விந்தணுக்கள் மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கும் கிருமிகள் வளரும். பருவம் தப்பி மழை பொழிந்தாலும், நீர்நிலைகள் நிரம்பி வழியும். வெள்ளப் பெருக்கால் நிலச் சரிவு, நில அரிப்பு ஏற்படலாம். அரிய வகை வைரங்கள் கண்டறியப்படும். நிழல் உலக தாதாக்கள் மற்றும் மோசடி பேர்வழிகளால் பரம்பரை பணக்காரர்கள் பாதிப்படைவார்கள். சிறுபான்மையின மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். வங்கிகளில் வாராக் கடன் அதிகரிக்கும். புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும். விளை நிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்க புது சட்டம் வரும்.

ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக் காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி திடீர் யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும். மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும்.

மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகளும், சிறு சிறு பாதிப்புகளும் வந்து நீங்கும்.
______________________________________________________________________

மேஷம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

எதையும் நேரிடையாகப் பேசுபவர் நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரை, உங்கள் பாதகாதிபதியான சனி வலுவடைந்து, 7-ல் அமர்கிறார். பிரபலங்கள் உதவுவர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வர். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

தம்பதிக்குள் வீண் சந்தேகம் எழும். உங்களுக்குள் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். ஆபரணங்கள், வங்கிக் காசோலைகளை, கையாளும்போதும், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போதும் கவனம் தேவை. அரசு வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் செல்லவேண்டாம். முக்கியப் பணிகளை நீங்களே மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய நேரிடலாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச்சிதைவால் ஆரோக்கியம் பாதிக்கும். வீண் செலவுகள் வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

சனி பகவான் வக்கிரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்கிறார். இந்த கால கட்டத்தில் பண வரவு, வி.ஐ.பி-களுடன் நட்பு உண்டாகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும் -அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால், இந்த காலகட்டத்தில் உடல்நிலை சற்று பாதிக்கலாம். 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை; 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

உங்கள் பாக்ய-விரயாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை; 11.9.2014 முதல் 16.12.2014 வரையிலான காலகட்டத்தில் செல்வம், செல்வாக்கு கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். தந்தைவழி சொத்துகளும், எதிர்பார்த்திருந்த பணமும் வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு கல்யாணம் சிறப்பாக முடியும். பிள்ளைகள் அயல்நாடு செல்வார்கள்.

சனி ராசியைப் பார்ப்பதால், சாப்பாட்டில் கவனம் தேவை. புளி, உப்பை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். சனி 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். சனி 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சேமிப்புகள் கரையும்; தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அதிக முதலீடு, கூட்டுத் தொழில் வேண்டாம். பாக்கிகளை இதமாகப் பேசி வசூலியுங்கள். கடையை மாற்றவேண்டிய சூழல் வரும். கமிஷன், மருந்து வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவர். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கவனம் செலுத்துங் கள். மாணவர்களுக்கு, அலட்சியப்போக்கால் மதிப்பெண் குறையலாம்; கவனம் தேவை. விளையாட்டின்போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலைஞர்களே! சிறு வாய்ப்பாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள்; சம்பள பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சுற்றியுள்ளவர்களின் சுய ரூபத்தை அறிய வைப்பதுடன், புதிய பாதையில் அழைத்துச் சென்று, உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
______________________________________________________________________
ரிஷபம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடும் உழைப்பாளி நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரை சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பக்குவமான பேச்சால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். நிம்மதி தேடி வரும். அறிவும், அழகும் வாய்ந்த குழந்தை பிறக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகள், உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வர். சிலர், சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். கையில் பணம் தங்கும்; சேமிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளை, அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில், புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் செலவு, பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருட்களை கையாள வேண்டாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தம- விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். வீடு- மனை சேரும். அரசால் ஆதாயம் உண்டு. மனைவி வழியிலும் சகோதர வகையிலும் உதவிகள் கிடைக்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், திடீர் பண வரவும், யோகமும் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

12.12.13 முதல் 18.5.14 வரை மற்றும் 11.9.14 முதல் 16.12.14 வரையிலும் உங்கள் அஷ்டம- லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். கொஞ்சம் அலைச்சல், செலவுகள், மூத்த சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் செல்வாக்கும், பணப் புழக்கமும், ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள்.

சனி 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவம் கூடும். எனினும், கூடாப் பழக்கவழக்கங்களையும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் தவிர்க்கவும். சனி 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வாகனங் களை இயக்கும்போது கவனம் தேவை. எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணமும் வந்து சேரும். உறவினர்- நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகள் எளிதில் வசூலாகும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில், பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சியடையும். பங்குதாரர்கள், வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில், பதவி- சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நலமாகும். மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவர்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ராஜ யோகத்தைத் தருவதுடன், எதிலும் வெற்றி வாகை சூடவைக்கும்
_____________________________________________________________________

மிதுனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

இங்கிதமான பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 5-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சமாகி வலுவடைவதால், கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் பொங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி விரைவில் பூர்த்தியாகும். உங்களின் செல்வாக்கு கூடும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

5-ம் இடத்தில் சனி அமர்வதால், குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனினும் கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணத்தைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் நட்பு வட்டாரத்தையும் கண்காணிப்பது நல்லது. அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில், உயர்கல்வி பெற அனுமதியுங்கள். அவ்வப்போது மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை, யோகா மற்றும் தியானத்தால் போக்கலாம். தேக வலிமை கூடும். சொத்து வாங்குவீர்கள். சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வேலைப்பளு, வீடு-வாகன பராமரிப்புச் செலவுகள், தாயாருக்கு உடல்நலக் குறைபாடு, பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

சனி பகவான் 21.12.11 முதல் 8.11.12 வரை, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும் - லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் செல்கிறார். பழைய கடனை அடைக்க புது வழி பிறக்கும். சகோதரியின் திருமணம் முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். இருமல், யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைகிறார்; பயணங்கள் அதிகரிக்கும். எதிர்த்துப் பேசியவர்களும் வலிய வந்து உங்களை ஆதரிப்பர்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை எடுத்துக் கட்டி செய்வீர்கள். புது டி.வி., ஃப்ரிஜ் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சப்தம - ஜீவனாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், மனைவி வழி உறவினர்கள் உதவுவர். எனினும், அவர்களால் செலவுகளும் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால், கண் பரிசோதனை அவசியம். எவருக்கும் எதற்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். சனி பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வந்து நீங்கும். சனி லாப வீட்டைப் பார்ப்பதால், ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். விளம்பரங்களால் விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உங்களின் வாடிக்கையாளர் ஆவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், கடின வேலைகளையும் எளிதில் முடிப்பீர்கள். செல்வாக்கு கூடும். கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். மாணவர்களுக்கு அலட்சியம் நீங்கும். விளையாட்டில் பதக்கங்கள் உண்டு.கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதுடன், எதிலும் விவேகமாகச் செயல்பட்டு, சாதிக்க வைப்பதாக அமையும்.
______________________________________________________________________

கடகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

கலை உணர்வு மிகுந்தவர் நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரையிலும் சுக வீடான 4-ம் வீட்டில் சனி அமர்கிறார்.

அலைச்சல் உண்டு. ராசிக்கு 7 மற்றும் 8-ம் வீட்டுக்கு அதிபதியாக சனி அமைவதால், வீட்டில் இல்லத்தரசியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வீர்கள். அர்த் தாஷ்டம சனியாக அமர்வதால், சிறு வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். எந்த வேலையையும் நீங்களே முன்னின்று முடியுங்கள்.

வீடு வாங்குவது, கட்டுவது இழுபறியாகும். எந்த சொத்து வாங்கினாலும், தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொல்லை தரும். விலையுயர்ந்த பொருட்களை இரவல் தருவதோ, வாங்குவதோ வேண்டாம். தம்பதிக்குள் பிரச்னை வந்தாலும் பெரிதுபடுத்த வேண்டாம். கட்டடப் பணிகளில், அரசு அனுமதி இல்லாமல் கூடுதல் தளங்கள் கட்டவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். அயல்நாட்டுப் பயணம், சாதகமாகும். பிள்ளைகள் செலவு வைப்பர். பண விஷயத்தில் கவனம் தேவை.

26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனி அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். பண பலம் கூடும். உங்களின் யோகாதிபதிகளான செவ்வாய், குரு பகவானின் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சனி செல்வதால், யோக பலன்கள் அதிகரிக்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - ஜீவனாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். 4.2.12 முதல் 22.6.12 வரை, சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் கடன் பிரச்னை, வாகன விபத்து, நெருப்பு காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும். மின் சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார்; திடீர் பயணங்கள், செலவுகள், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். சொந்தபந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம். உங்கள் சஷ்டமாதிபதியும் - பாக்யாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரையிலான காலகட்டத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, வாகன வசதிகள் பெருகும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது களைப்பு வந்து நீங்கும்; கோபம் மேலோங்கும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புதிய பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும்.

வியாபாரத்தில் கறாராக இருங்கள். போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்யவும். பெரிய முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்களிடம் கருத்து மோதல்கள் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சிலர், உங்களை வழக்கில் சிக்க வைக்க முயல்வார்கள். கடின உழைப்பால் பதவி- சம்பள உயர்வு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்தவும். கலைஞர்களுக்கு வேற்று மொழி பேசுபவர்களால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சல், செலவுகளைத் தந்தாலும், முடிவில் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.
________________________________________________________________________

சிம்மம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தலைமைப் பண்பு அதிகம் உள்ளவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். முயற்சிகள் வெற்றி பெறும். இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளை இல்லாமல் வருந்தியவர்களுக்கு, அழகிய வாரிசு உருவாகும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்குவீர்கள். இனி, பேச்சில் கறாராக இருப்பீர்கள்.

சனி பகவான் வக்ரமாகி, 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால், பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். கேரண்டி கையெழுத்து போட வேண்டாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை, சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் சொத்து சேரும். வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சுப நிகழ்வுகளால் வீடு களை கட்டும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், செலவுகள் கூடும். உறவினர்-நண்பர்களும் குறை கூறுவர். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை, ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும்; கடனை பைசல் செய்வீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வழக்கு சாதகமாகும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் பூர்வ புண்ணியாதி பதியும்-அட்டமாதிபதியுமான குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்த காலகட்டத்தில், பிள்ளை பாக்யம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு; பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம், உத்தியோகத் தில் பதவி உயர்வு உண்டு.

சனி 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

சனி 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அந்தஸ்து உயரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள்- சித்தர்கள் போன்றோரின் தொடர்பு கிடைக்கும்.

வியாபாரத்தில், கடையை நவீனமயமாக்குவீர்கள். வேலை ஆட்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்கு பிரச்னை தந்து வந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வும் இனி கிடைக்கும். சிலருக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும்.

கன்னிப் பெண்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் உடனே முடியும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கலை- விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள் குறித்த கிசுகிசுத் தொல்லைகள் விலகும். நினைத்தது நிறைவேறும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, வெற்றிக்கனியை பறிக்க வைப்பதுடன், பகட்டான வாழ்வையும் அமைத்துத் தருவதாக அமையும்.
_______________________________________________________________________

கன்னி

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மனிதநேயம் மிகுந்தவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும் எதிர்மறை எண்ணங்கள், வீண் பயம் ஆகியன நீங்கும்.

மதிப்பு உயரும். தவறான முடிவுகளால் பிரச்னைகள் சூழ்ந்த நிலை மாறும். உடல் நிலையும் சீராகும். எனினும் எளிய உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தேவை.

சுற்றியுள்ளவர்களில் நல்லவர்களை அடையாளம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவியின் மனக் குழப்பங்கள் நீங்கும்; உற்சாகம் மேலோங்கும். எனினும் பாதச் சனியாக அமைவதால், தம்பதிக்குள் ஈகோ பிரச்னை தலை தூக்கலாம். எல்லோரிடமும் கனிவுடன் பேசுங்கள். மற்றவர் பிரச்னையில் தலையிடுவது, சாட்சி கையெழுத்திடுவது வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், பழைய பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகார பதவியில் அமர்வீர்கள்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். திருமணம் கூடி வரும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் தாய் வழியில் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்கவேண்டி வரும். சனி பகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து புலம்புவீர்கள். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பண வரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரத்தில், போட்டியாளர்களைச் சமாளிக்கும் வகையில் உங்கள் அணுகுமுறை மாறும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத்தில், உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். சிலருக்கு, அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டிருந்த திருமணம் நல்லவிதமாக நடந்தேறும். மாணவர்களுக்கு, விரும்பிய நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர்வீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஆரோக்கியத்தையும் பண வரவையும் தருவதாக அமையும்.
_________________________________________________________________________

துலாம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தோல்வியைக் கண்டு துவளாதவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரையிலும் ஜென்மச் சனியாக அமர்கிறார். அதற்காக கவலை வேண்டாம். சனி உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதியாக வருவதால் நல்லதையே செய்வார். உச்சமாகி சுபத்தன்மை அடைவதால், பண வரவையும் அதிகரிப்பார். வாழ்வில் நிம்மதி பிறக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

எனினும், ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரம் தவறாமல் சாப்பிடவும். பொரித்த- வறுத்த உணவு வகைகளைத் தவிர்க்கவும். திடீர் பயணங்க ளால் அலைச்சல் ஏற்படும். இளைய சகோதரரை அனுசரித்துப் போகவும். அரைகுறையாக நின்ற வீடுகட்டும் பணி தொடர, வங்கிக் கடனுதவி கிடைக்கும். எவரிடமும் சொந்த விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பி-களின் நட்பால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு, மனை வாங்குவீர்கள்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை, உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் கடன் பிரச்னை, திடீர் பயணம், வீண் செலவுகள், கவலைகள் வந்துசெல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும் - சப்தமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். திடீர் பண வரவு உண்டு. இழுபறியான வேலைகள் பூர்த்தியாகும். அரசால் அனுகூலம், மனைவி வழியில் ஆதாயம் உண்டு. 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைகிறார். எனவே மனைவியுடன் மோதல், செலவுகள், சிறு சிறு நெருப்பு காயங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது- விற்பது சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புது வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, நல்ல பதில் கிடைக்கும்.

உங்கள் 3-ம் வீட்டதிபதியும் 6-ம் வீட்டதிபதியு மான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரையிலும், உங்கள் முயற்சிகள் பலிதமாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் கிட்டும் மூத்த சகோதர வகை யில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். எனினும் விபத்து, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவி கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனி 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை மாறுவீர்கள். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், துணி வகை களால் லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்து போகவும். உத்தியோகத்தில், சம்பள - பதவி உயர்வு உண்டு. அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சட்டத்துக்கு புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட கல்யாணம் கைகூடி வரும். மாணவர்கள், அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு, வீண் வதந்திகள் இருக்கத்தான் செய்யும்; மனம் தளர வேண்டாம். சம்பள விஷயத்திலும் கண்டிப்பு காட்டாதீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு பணப் புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
_______________________________________________________________________

விருச்சிகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மனசாட்சிப்படி செயல்படுபவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி, ராசிக்கு 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும்.

தற்போது விரய வீட்டில் வந்தமரும் சனி, யோக பலனையே தருவார். ஆனாலும், வீண் செலவுகள் வேண்டாம். தீர்க்க முடியாத பிரச்னைக்கும் தீர்வு காண்பீர்கள். தம்பதிக்குள் பனிப்போர் விலகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மகான்களின் ஆசி கிட்டும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம், பண வரவு, வீடு- வாகன வசதி, வி.ஐ.பி-களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். ஆரோக் கியத்தில் கவனம் தேவை. எனினும் தன்னம்பிக்கை பிறக்கும். பூமி சேர்க்கை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பண வரவு உண்டு. தாய்வழி சொத்து கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி பகவான் வக்ரம் அடைவ தால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார். புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-தனாதிபதியு மான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, தொட்டது துலங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் துரத்தும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தைக்கு நெஞ்சு வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர் கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தி யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

கன்னிப் பெண்களுக்கு, திருமண முயற்சி பலிதமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு, சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, யதார்த்தமான முடிவு களால் முன்னேற்றத்தையும், விட்டுக்கொடுக்கும் போக்கால் வெற்றியையும் தருவதாக அமையும்.
___________________________________________________________________________

தனுசு

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

உதவும் மனம் கொண்டவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, லாப வீட்டில் அமர்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. சேமிக்கும் எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

கணவன்-மனைவிக்குள் கலந்து பேசி குடும்பச் செலவு களைக் குறைக்க முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றிவிட்டு, ரசனைக்கேற்ற புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு பெருகும். தாய் வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அத்தை- மாமன் வழியிலான பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச் சுமை, மறைமுக அவமானம், ஏமாற்றம் வந்து செல்லும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்களை எதிரியாக நினைத்த பலரும், இனி உங்களின்

நல்ல மனசைப் புரிந்துகொள்வர். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால்... பிள்ளைகளால் அலைச்சல், உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். தூரத்துச் சொந்தங்கள் தேடி வரும். 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வி.ஐ.பி-கள் உதவுவர். அரசாங்க நெருக்கடிகள் நீங்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

சனி பகவான் ராசியைப் பார்ப்பதால், டென்ஷன், அலர்ஜி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.

வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்திய மாக விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கன்னிப் பெண்களுக்கு, நல்ல கணவன் வாய்ப்பார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைஞர்களே, புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி வந்துசேரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக அமையும்.
__________________________________________________________________________

மகரம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மதிப்பவரை மதிக்கும் நீங்கள், மீறுபவர்களை மிதிக்கத் தயங்கமாட்டீர்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 10-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான சனி உச்சமாகி யோகாதிபதியான சுக்ரனின் வீட்டில் அமர்வதால், விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள், உங்களைப் புரிந்து கொள்வர். தந்தையுடனான மோதல்கள் விலகும். பிதுர் வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபம் நீங்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாகும். வழக்கில் வெற்றியுண்டு.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், வீண் விரயம், பணப் பற்றாக்குறை, தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்வதால், பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். புது வேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். கார உணவுகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் ஒரு சொத்தை விற்று, வேறு சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், கடன் குறையும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர், வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல்

16.12.14 வரை உங்கள் திருதியாதிபதியும்- விரயாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சேர்க்கை உண்டு. திடீர் பயணம், செலவுகள் உண்டு. எவருக்கும் பணம், நகை வாங்கித் தர வேண்டாம்.

சனி 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சனி 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, சிறு சிறு அறுவை சிகிச்சை, அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனி 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, பெட்ரோல் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவர். 10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். திடீர் இடமாற்றமும் சாதகமாக அமையும். கன்னிப் பெண்களுக்கு, வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வைக்கும்.

___________________________________________________________________________

கும்பம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தாராள மனம் படைத்தவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 9-ம் வீட்டில் அமர்கிறார். இனி, எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தன்னம்பிக்கை மேலோங்கும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பிரச்னைகள், கவலைகள் நீங்கும். நிம்மதி பிறக்கும். தம்பதிக்குள் மனஸ்தாபம் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்களும் வலிய வந்து பேசுவர். உங்களை ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கும் லட்சியம் நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு- முழங்கால் வலி, சிறு சிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும்.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால், இனம் தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி பகவான் செல்கிறார். இந்த காலத்தில், கம்பீரமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது- விற்பது லாப கரமாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத் திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உங்களின் பலம் - பலவீனத்தை உணர்வீர்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் தனாதிபதியும்- லாபாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்ட மிட்ட காரியங்கள் கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு- வாகன வசதி பெருகும். சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படுவீர்கள். சொத்து சேரும். வழக்கு வெற்றியடையும். சனி லாப வீட்டைப் பார்ப்ப தால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும்.

வியாபாரத்தில், நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தேடி வரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கிக் கடனை முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும்.

கன்னிப் பெண்கள், தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். கல்யாணம் கூடிவரும். மாணவர்கள், விரும்பிய கோர்ஸில் சேரும் வாய்ப்பு அமையும். கலைஞர்களின் படைப்புகளுக்கு பாராட்டு கிடைக்கும்; அரசு உதவும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஆபத்தான சூழல்களை நீக்கி, கடின உழைப்பால் சாதிக்க வைக்கும்.
_________________________________________________________________________

மீனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

சுற்றியிருப்பவர்களும் சுகமாய் வாழ வேண்டும் என நினைப்பவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்கிறார். பேச்சில், செயலில் எச்சரிக்கை தேவை. எதிர்மறை எண்ணங்கள், நேரம்கெட்ட நேரத்தில் பயணம், வீண் பேச்சு ஆகியவற்றை தவிர்ப்பது நலம். வங்கிக் காசோலைகளை கையாளும்போதும், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போதும் கவனம் தேவை.

மகனின் உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரது சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்து பங்கை போராடி பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். கடன் பிரச்னைகள் மனசை வாட்டும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கர்ப்பிணிகள் மருத்துவ ரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுசை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்களும் வந்து செல்லும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப் பயிற்சியும் அவசியம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும்-பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் உண்டு. புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு,

அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் சிறு விபத்து, மன உளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், வாகனத்தை கவனமாக இயக் குங்கள். சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் ராசிநாதனும் ஜீவனாதி பதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு மாறுவீர்கள் உறவினர்களுடன் பகை வரக்கூடும்.

மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும் எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று விட்டு, புது வீடு வாங்குவீர்கள். அரசாங்க வரிகளை உரிய நேரத்தில் செலுத்திவிடுங்கள்.

சனி ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதுர்ய மாகப் பேசுவீர்கள். சிலநேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனி 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மொழியினரால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் வேண்டாம். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரிப் பாகங்கள் மூலம் லாபம் வரும். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில், புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

கன்னிப் பெண்கள், பெற்றோரை அனுசரித்துப் போகவும். மாணவர்கள், விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். கலைத்துறையினர், வதந்திகள் குறித்து கலங்க வேண்டாம். உங்களின் படைப்புகளை வெளியிடுவதில் போராட வேண்டியிருக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, இழப்புகளைத் தந்தாலும் சகிப்புத்தன்மையால் வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.
______________________________________________________________________