ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, July 22, 2013

நோய்களும் ஜோதிடமும்


பாவங்கள் குறிப்பிடும் உடற்பாகங்கள் மற்றும் நோய்
 
லக்ன பாவம்:
ஒருவரது உயரம், தோற்றம், பருமன் இவற்றைக் குறிப்பதாகும். சிறப்பாக, தலை, மூளை, ரோமம், தோலைக்குறிக்கும். நிறத்தின் தன்யைக் குறிக்கும். லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகத்திற்கேற்ப அவரது நிறம் அமையும்.
ஆயுள்நோய் எதிர்ப்புச் சக்திஅல்லது இறுதி வரை ஏதாவது ஒரு வியாதியால் துன்பப்படும் நிலை சக்திநோய் தாங்கும் சக்தி உடல் உறுதி வியாதியிலிருந்து விடுபடும் நிலைநோய் குணமாகும் நிலை.

2ம் பாவம்:
முகம், கண்கள், பற்கள், தொண்டை, மூக்கு, குரலின் தன்மை இவற்றைக் குறிக்கும்.
இளமைக் காலத்தில் ஏற்படும் நோய்கள். அவற்றால் ஏற்படும் பாதிப்பு

3ம் பாவம்:
காதுகள், கழுத்து, தோள்பட்டை, கைகள், மூச்சுக் குழுய், அதில் ஏற்படும் அழற்சி, குரல் வளை, குரல் வளை அழற்றி.
நோய் எதிர்ப்பு சக்தி பெறும் தகுதிநோயைத் தாங்கும் தைரியம், உடலில் ஏற்படும் சக்தி இரத்தத்தின் தன்மை, முதலியன

4ம் பாவம்:
மார்பகம், நுரையீரல், உணவுக் குழாய்.
குடும்பத்தில் வரும் பரம்பரை நோய், உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய் மன வருத்தத்தால் ஏற்படும் பாதிப்பு

5ம் பாவம்:
இருதயம், ஈரல், மண்ணீரல், கணையம், சிறுகுடல் பகுதி, பித்தப்பை.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்பு, உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பு

6ம் பாவம்:
கிட்னி, குடல் பகுதி.
வியாதிகளைக் குறிப்பிடும் இடம். விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பு, அதனால் ஏற்படும் காயம், துன்பம் முதலியன

7ம் பாவம்:
கர்ப்பப் பை, கர்ப்ப பைக்குச் செல்லும் குழாய் (ஃபெலோபியன் டியூப்), கரு முட்டை மலக்குடல், அடி வயிறு.
உடல் உறவால் ஏற்படும் வியாதிகள்.

8ம் பாவம்:
வெளிப்புற ஜெனன உறுப்புக்கள், ஆசனவாய் (மலத்துவாரம்).
தீராத வியாதிகள் கண்டு பிடிக்க இயலாத வியாதிகள். அவற்றால் ஏற்படும் துன்பம், இழப்பு

9ம் பாவம்:
இடுப்பு, தொடைப்பகுதி.
இறையருளால் பெறும் உடல் நலம்.

10ம் பாவம்:
முழங்கால் மூட்டுப்பகுதி.
உடலின் சக்தி, செயல் திறன், செயலாற்றும் தகுதிக்கானச் சக்தி பெறும் நிலை

11ம் பாவம்:
கால், கண்.
வியாதிகளிலிருந்து விடுபடும் நிலை. நோய் குணமாகுமா? என்பதையும் தெரிவிக்கும் பாவம்

12ம் பாவம்:
பாதம், கண்.
மருத்துவ மனையில் இருக்கும் நிலை. குடும்பத்தை விட்டு தனித்திருக்கும் நிலை தொற்று நோய் பாதிப்பால் தனி விடுதியில், மருத்துவ மனையில் தனிப்பகுதியில் இருக்கும் நிலை




ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.

Saturday, June 15, 2013

சுக்கிர மகாதிசை பலன்கள்



சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும். இதில் சுக்கிர பகவானின் சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன் வாழ்வான். பலவிதமான சுக போகங்களும் உண்டாகும். பெருமை தரத்தக்க இலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடி போல வந்து அமைவாள். சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும். மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்து வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்
இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஜுரத்தினால் பீடையுண்டாகும். நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம். பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனை நிறைவேற்றவும் செய்வர். நல்ல குணம் பொருந்திய தாய், தந்தையின் மரணம் முதலியன சம்பவிக்கும். குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில் தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும். தன் துணைவியை விட்டுப்பிரிந்து ஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: திருமகளைப் போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள். அவளது சாவுக்குப்பின் தேடி வைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும்; பதர் போன்ற மனைவியை விரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகன் ஓடிப் போதலும் நேரும். வியாதி தொடர்ந்து காண்பதால் வெகு வருத்தையும் அடைவான். சமயம் பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனை அதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: எலி கடித்தலால் ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும். வயிற்றில் உபாதை ஏற்படும். குதத்தில் கடுப்பு உண்டாகும். பெண்களால் தொல்லைகள் ஏற்படும், கொடுமையான பகைவனும் வந்து பற்றிக் கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: சிரரோகம், காமாலை, சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும், அபமிருந்து தோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும். மேலும் மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்கு, குட்டம் போன்ற நோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின், ஆதிக்க காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனம் விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும் சுபயோகங்களும் நேரும். விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கை ஏற்படும். அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும். நன்மை தரத்தக்க ஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர். நாடு நகரங்கள் வசமாகும். பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்த நண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 3 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வெகு தன லாபம் வாய்க்கும் பூமி, மனை முதலியன நேரும். அரச சம்பத்துடன் வாழ்வது நேரும். குலமாதர், நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும் உண்டாகும். மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒரு பெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவனியில் பொலிவுற வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10 மாதஙகளும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம் தெளிவாகக் கேட்பாயாக! நாடு நகரம் வசமாகும். தன்னிகரில்லாத அரசனெனஆட்சி புரியும் நிலை ஏற்படும். முடிவில் இந்நிலவுலகில் தவத்திற் சிறந்த தவசியாதலும் நேரும். கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும் பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரச செல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும். மிகுதியான திரவிய நாசம் ஏற்படும். ஒப்பாகும் மிக்காரும் இல்லாது தனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும். நாடு நகரங்கள் இழப்பாகும், சம்பத்து குறையும். தாய் தந்தை மரணமடைவர். கோள் வைக்கக் கூடிய சத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும். மனைவி மனம் வெறுத்து வீட்டைவிட்டுப் போவாள். குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.