மற்ற பதிவுகள்

Saturday, June 15, 2013

கேது மகாதிசை



கேது மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும். இதில் இவரது சுய புத்தியான ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவை தான் என்று சொல்வோம். நன்கு கவனித்து கேட்பாயாக! புகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள் ஏற்படும். வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால் வியாதியும் நேரும். பெரும் பொருட்சேதமும் அங்கத்தில் குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும். தான்வசிக்கும் நகரத்தில் பலவகைச் சூனியங்களும் உருவாகும், நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித் துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! குறைதல் இல்லாத பகைவரால் விலங்கு பூணுதல் நேரும். பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும். மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும். எனினும் தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவி மக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! மனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும். அக்கினி பயமும் பேய், பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும். இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும், குருநாதர்க்கும் மரணம் ஏற்படும். வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக் கூறுவோம். கவனித்துக் கேட்பாயாக! மனைவியானவள் , இச்சாதகனுடன் மனம் வேறுபட்டு விலகி நிற்பாள். அதர்மம் நேரும். மனைவி மக்கள் பாழடைவர். மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள் சேதமடைதலும் நேரும். தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும். இது கண்டு இச்சாதகன் நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வலிமையுள்ள இனஜன பந்துக்களும் தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர். மனையில் சிலர் கோள் சொல்லுதலால் குடும்பம் பாழாகும். பெண்களால் குல நாசம் ஏற்படும். நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும். சகோதர விரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18 நாள்களாகும். நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுவோம். கவனமாய்க் கேட்பாயாக! பகைவராலும், திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும். சந்தேகம் கொண்ட மனைவியினால் குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும். தேகத்தில் வியாதி காணும், இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப் போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும், இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும். மனம் விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சி பொங்கும். பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாக வந்தடையும். வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்து மனச்சோர்வகற்றும். பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வானளாவிய செல்வமும், பெரும் பொருளும் சேதம் அடையும். நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவி மக்கள் கை விட்டுப் போதலும் நேரும். மூன்று மாத கால அளவில் மரணமும் நேரும். மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்கு மரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


கேது மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாய்! இதுவரை பற்பல இன்பங்களில் வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும் ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும். திருமகள் இவன் மனையை விரும்பிச் சேர்வாள். எனவே தீங்கொன்றும் நேராது எவ்வித மனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.